கருணாநிதி நூற்றாண்டு விழா: 100 கவிஞர்கள் கவிதாஞ்சலி
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 100 கவிஞர்களின் கவிதாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய விழாவும், நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் கவிஞர் பேரா தலைமை வகித்தார். ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு இலக்கிய விழாவினை துவக்கி வைத்து பேசினார். தொடர் நிகழ்ச்சியாக கவிஞர் பொன் சந்திரன் தலைமையில் கருத்தரங்கமும், நெல்லை கவிஞர் பாமணி தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்திற்கு நெல்லை கவிஞர் ஜெயபாலன், சென்னை ஸ்ரீதேவி, ஈரோடு கௌரிசங்கர், சென்னை நம்ம ஊர் கோபிநாத், திண்டுக்கல் ஷாஜகான் ஆகியோர் நெறியாளர்களாக செயல்பட்டனர் . மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் பேரா வரவேற்றார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திருநெல்வேலி விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். கவிஞர் நெல்லை ஜெயந்தா முன்னிலை வகித்தார். இலக்கியப் பேச்சாளர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி கலந்துகொண்டு விழா மலரை வெளியிட கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். 100 கவிஞர்களுக்கு விருது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், நெல்லை பொதிகை தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், திருவள்ளுவர் நலச்சங்க நிறுவன கவிஞர் சங்கிலி பூதத்தான், நூலகத் தந்தை அரங்கநாதன் அறக்கட்டளை நிறுவனர் பூல்பாண்டி, வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ, தூத்துக்குடி தாமிரவருணி தமிழ் வனம் மற்றும் பாரதியார் இலக்கியப் பேரவை நிறுவனர் லட்சுமணன், சென்னை மருத்துவர் செந்தில் வடிவு, கன்னியாகுமரி முனைவர் கீதா, பாரதியார் சங்கத் தலைவர் ஜெயமேரி, விருத்தாசலம் அரங்க சீனிவாசன், சேலம் மாவட்ட முத்தமிழ்ச் சங்கம், ஓமலூர் தமிழ்ச் சங்கம் உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள், கவிஞர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் கவிஞர் பேரா செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu