கருணாநிதி 100 விநாடி வினா போட்டி: அருப்புக்கோட்டையில் நவ. 30ல் துவக்கம்

கருணாநிதி 100 விநாடி வினா போட்டி: அருப்புக்கோட்டையில் நவ. 30ல் துவக்கம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விநாடி-வினா போட்டி கனிமொழி எம்.பி. முன்னிலையில் நவம்பர் 30 ஆம் தேதி துவங்குகிறது.

தி.மு.க. மகளிர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னெடுப்பில் நடைபெறும் 'கலைஞர் 100 விநாடி வினா' போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நவம்பர் 30 ஆம் தேதி துவங்குகிறது.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டியின் இணையவழி சுற்று நவம்பர் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டு, இதுவரை 1,76,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்துள்ளன. மேலும், 2,25,718-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விளையாடினர். 11,30,897 பேர் www.kalaignar100.co.in இணையதளத்தை இதுவரை பார்வையிட்டு உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விநாடி வினா போட்டி நடத்தப்படும். இது ஒரு குழு விநாடி போட்டியாக இருக்கும், ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்குபெறுவர்.

கலைஞர் 100 விநாடி வினா போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டிகள், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய 12 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும் இப்போட்டி மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் எடுத்த ஒரு குழு என, 39 குழுக்கள் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில் பங்குபெறுவர்.

மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் மஹாலில் நவம்பர் 30 ஆம் தேதி துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் டிசம்பர் 1 ஆம் தேதியும், மதுரையில் டிசம்பர் 2 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து, அடுத்த மண்டலத்தில் போட்டிகள் நடைபெறும். விருதுநகர் மண்டலத்தில் (விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்) தூத்துக்குடி மண்டலத்தில் (தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி) மதுரை மண்டலத்தில் (மதுரை, தேனி, திண்டுக்கல்) நடைபெறும்.

மண்டலத்தில் வெற்றி பெரும், 18 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோர் என இரண்டு பிரிவிலும் தலா 12 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவர். மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெற உள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

Tags

Next Story