வடியாத கழிவுநீர் கலந்த மழைநீர்: குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபர்
கழிவுநீரில் சோப்பு போட்டு குளித்து எதிர்ப்பை தெரிவித்த நபர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளான ஏலாக்கரை, பாலாமடம், பெருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், வீடுகளில் வசிக்க முடியாமல் முகாம்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கி வருகின்றனர்.
மேலும், சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்லவும் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது தேங்கி நிற்கும் மழைநீரில் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு கழிவறை கிணறுகளில் இருந்தும் கழிவுகள் வெளியேறி, இந்த தண்ணீருடன் கலந்து துர்நாற்றம் வீசியும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதை அகற்ற ஊர்மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் போராட்டங்கள் அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு, இப்பிரச்சனையை கொண்டு வரும் வகையிலும், அதை கண்டித்தும், அந்த பகுதியை சேர்ந்த ரசல்தாஸ் என்ற நபர், பெருங்குளம் செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கலந்த மழைநீரில், சோப்பு தேய்த்து குளித்து நூதன முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. கழிவு நீரையும் மழை நீரையும் அகற்ற வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu