போலி திமிங்கல உமிழ்நீர் - 2 பேர் கைது.

போலி திமிங்கல உமிழ்நீர் - 2 பேர் கைது.
X

போலி திமிங்கல உமிழ்நீர் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள்

குமரியில் போலி திமிங்கல உமிழ்நீர் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் சமீபகாலமாக திமிங்கல உமிழ் நீர் கட்டி விற்பனை மோசடி வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சம் ரூபாய்கள் கைமாற்றப்பட்டு பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு திமிங்கல உமிழ்நீர் கட்டி விற்பனை செய்வது குறித்த தகவல் குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி குமரி மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் தக்கலை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் திமிங்கல உமிழ்நீர் கட்டியை ருபாய் 21 இலட்சம் ருபாய்க்கு விற்பனை செய்ய முயன்று பேச்சுவார்த்தை நடத்தி ருபாய் 10 ஆயிரம் முன்பணம் வாங்கி உள்ளனர். இதில் சந்தேகமடைந்த ராஜேஷ், குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்,

உடனே போலீசார் ராஜேஷிடம் மேற்கண்ட நபர்களிடம் மீதி பணம் உள்ளது பொருள் எங்கே வாங்க வர வேண்டும் என்று கேட்க கூறி உள்ளனர். அதன்படி ராஜேஷ் அந்த நபர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அந்த நபர்கள் இன்று திமிங்கல உமிழ்நீர் கட்டியுடன் தக்கலை பகுதிக்கு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் வருவதை பொறிவைத்து காத்திருந்த தனிப்படை போலீசார் திமிங்கில உமிழ்நீர் கட்டிகளுடன் தக்கலை பகுதிக்கு வந்த இரண்டு பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த திமிங்கல கட்டிகளை சோதனை செய்த போது அவை போலியானவை எனவும் அவை வாசனை திரவியங்களான குந்திரிக்கம் மற்றும் ஜவ்வாது சேர்த்து செய்யபட்ட ஒரு கலவையிலான கட்டி என தெரியவந்தது.

மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் இருவரும் நாங்குநேரி டோனாவூர் பகுதியை சேர்ந்த ராஜா 39 மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாவடி பகுதியை சேர்ந்த சுபாஷ் 29 என்பதும் தெரியவந்தது.

தற்போது திமிங்கல உமிழ்நீருக்கு கிராக்கி அதிகமாக இருப்பதை தெரிந்துகொண்ட இருவரும் இதுபோன்ற போலி கட்டிகளை தயார் செய்து பணம் படைத்தவர்களை ஏமாற்றி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் கைது செய்த இருவரையும் பறிமுதல் செய்த போலி திமிங்கல கட்டிகளோடு மார்த்தாண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மார்த்தாண்டம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இதன் பின்னால் யார் யார் செயல்படுகிறார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி