குமரியில் வார விடுமுறைக்காக ஏங்கும் போலீசார்: அதிகாரிகள் அலைகழிப்பு

குமரியில் வார விடுமுறைக்காக ஏங்கும் போலீசார்: அதிகாரிகள் அலைகழிப்பு
குமரியில் டிஜிபியின் உத்தரவை மதிக்காமல் காவலர்களுக்கு விடுமுறை அளிக்காமல் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை மற்றும் பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றுக்கு விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் என சமீபத்தில் தமிழக காவல் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அனைத்து மாவட்டங்களிலும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவு தமிழகமெங்கும் பணி நிமித்தம், மன நெருடல், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள போலீசாருக்கு அது பெரும் நிவாரணியாக அமைந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் டிஜிபியின் உத்தரவை மதிக்காமல் காவலர்களுக்கு விடுமுறை அளிக்காமல் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிஜிபி உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும் என்பதால் அதற்கு புதிய உத்திகளை பல காவல் அதிகாரிகள் தற்போது கையாண்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள இரு காவல் உட்கோட்டங்களில் இந்த சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் இதற்குத் தீர்வு காண குறைந்தபட்சம் தினசரி காவல்நிலைய சிசிடிவி பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெற்று ஆய்வு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும் என்பது தான் தற்போது போலீசாரின் புலம்பலாக உள்ளது.

மேலும் போலீசாரிடம் உட்கோட்டம் அல்லது காவல் நிலையம் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறைதீர் கூட்டங்கள் நடத்தி அதிகாரிகள் தவிர்த்து காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தால் இச்சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு வரும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story