குடிபோதையில் பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை
தொடர் விடுமுறை மற்றும் ரமலான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கேரளா மாநிலம் கொல்லம் சவரா பகுதியில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் பழனி, கன்னியாகுமரி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பும் வழியில் கேரளா மாநிலம் பாறசாலை பகுதியில் செயல்படும் சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனை அருகே டீ கடை ஒன்றில் டீ குடிக்க இறங்கி உள்ளனர்.
தொடர்ந்து அருகில் இருந்த சரஸ்வதி மருத்துவ மனையில் அனுமதி இன்றி புகுந்து கழிவறைக்குள் கூட்டம் கூட்டமாக சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு காவலாளியிடம் தகராறிலும் ஈடுபட்டனர். இதற்கு காவல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அங்கிருந்து சென்ற கும்பல் மீண்டும் வந்து மருத்துவமனை காவலாளிகள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் பெண்களும் சேர்ந்து ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கல்லை எடுத்து மருத்துவமனை மீது வீசினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவமனையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த கும்பல் அத்துமீறி சென்று தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பலில் ஆண்கள் பலரும் மது போதையில் இருந்தும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது, இதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்த அரவிந்த், சந்தீப், ராமச்சந்திரன், கிரிஷன், மனோஜ், சுரேஷ் குமார் ஆகிய ஆறுபேர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பிரபல பல்நோக்கு மருத்துவமனைக்குள் குடி போதையில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu