ஆன் லைனில் 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டு வாலிபர் கைது
![ஆன் லைனில் 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டு வாலிபர் கைது ஆன் லைனில் 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டு வாலிபர் கைது](https://www.nativenews.in/h-upload/2022/02/11/1475788-img-20220211-wa0014.webp)
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த மார்கரெட் என்ற 60 வயது பெண்மணி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண் எனக் கூறி இமெயில் மூலம் தன்னை ஒருவர் தொடர்பு கொண்டு தனது கணவர் உயிரிழந்த நிலையில், கணவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான பணத்தை இந்திய அனாதை குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அந்த குழந்தைகளை அடையாளம் காட்டினால் நாங்கள் அனுப்பும் தொகையில் 30 சதவீத கமிஷன் தங்களுக்கு தரப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதற்கான சுங்கவரி மற்றும் ஜி.எஸ்.டி என மொத்தம் 51 லட்சம் ரூபாய் தங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பேச்சை நம்பிய மார்கரெட் பல தவணைகளாக 51 லட்சம் ரூபாய் பணத்தை நைஜீரிய நாட்டு நபரின் வங்கிக் கணக்கில் அனுப்பியதாகவும் பின்னர் இது மோசடி நபரின் சதி செயல் என தெரியவந்ததாகவும் அந்த கும்பலை கண்டுபிடித்து தனது பணத்தை மீட்டு தரவேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் மார்கரெட்டிடம் மோசடியில் ஈடுபட்ட நபர் நைஜீரியாவை சேர்ந்த 35 வயதான எபூகா பிரான்சிஸ் என்பதும் அவர் டெல்லியில் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து டெல்லிக்கு விரைந்த சைபர் கிரைம் போலீசார், பல இடங்களில் தேடி இறுதியாக உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் தலைமறைவாக இருந்த நைஜீரிய நாட்டு வாலிபரை கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, இந்த வாலிபர் தன்னந்தனியாக இந்த மோசடியில் ஈடுபட்டாரா அல்லது அவரது பின்னணியில் மோசடி கும்பல் ஏதேனும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu