காவல் நிலையம் அருகே படுகொலை : நண்பனை வெட்டியவர் கைது

பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் விஜய், சென்னையில் தனியார் ஆம்னி பேருந்து கிளீனராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு தம்பி உள்ளனர், சகோதரி மற்றும் இளைய சகோதரர் ஆகியோருக்கு திருமணமான நிலையில் இவர் மட்டும் திருமணம் செய்யாமல் தனியாக தாயாருடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருள் செல்வன் என்பவரும் திருமணமாகாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார், இருவரும் அவ்வப்போது மதுக்கடையில் மது குடிக்கும் போது பார்த்து பழகி நண்பர்களாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வதும் வருவதுமாக இருந்து வந்துள்ளனர், வேலைக்கு சென்றாலும் கிடைக்கும் பணத்தை மொத்தமாக சேர்த்து குடித்தே தீர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அருள் செல்வத்திற்கு 3 சகோதரிகள் உள்ளனர், அவர்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
இதனிடையே மது அருந்தும் போதெல்லாம் விஜய், அருள் செல்வத்திடம் அவரது சகோதரி ஒருவர் மீது தனக்கு ஆசை உள்ளதாகவும் அவளுடன் வாழ வேண்டும் என்றும் பல முறை கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டு இருந்த போது இதே போன்று விஜய் கேட்டதாகவும், அதற்கு அருள் எதிர்ப்பு தெரிவித்த போது நீயே இங்கு வந்து ஒட்டியவன் தானே என்று கூறி விஜய் தரக்குறைவாக பேசி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருள் அருகில் இருந்த இறைச்சி கடைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து விஜய்யை சரமாரியாக கழுத்து மற்றும் தலை பகுதிகளில் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்தவர்கள் அருள் செல்வத்தை பிடித்து வைத்துகொண்டு விஜயின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
காவல் நிலையம் அருகில் இருப்பதால் போலீசாரும் உடனே அங்கு சென்று உயிருக்கு போராடியபடி இரத்த வெள்ளத்தில் கிடந்த விஜய்யை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அருள் செல்வத்தை கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த விஜய் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த தகவல் அறிந்த போலீசார் அருள் செல்வத்தின் மீது பதியபட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இருவர் குறித்தும் போலீசார் தரப்பில் நடத்தபட்ட விசாரணையில் உயிரிழந்த விஜய் மீது (307) கொலைமுயற்சி முதற்கொண்டு 11 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தற்போது கொலை செய்த குற்றவாளி அருள் செல்வத்தின் மீது ஒரு வழக்கும் பதியப்பட்டு உள்ளதாகாவும் கூறினர்.
இருவரும் முழு நேரமும் மது குடித்துவிட்டு வேலைகளுக்கு செல்லாமல் ஊர்சுற்றி திரிந்ததாவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu