தேசிய அளவிலான பதக்கம் பெற்ற வீரர்களை அவமதித்த கேரளா ரயில்வே அதிகாரி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது, இதில் தமிழக அணி சார்பாக சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மூன்று வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள் போல்வால்ட் விளையாட்டு பிரிவில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற வீராங்கனை தங்க பதக்கம் வென்று ஆசிய அளவிலான போட்டிக்கு இந்திய அணிக்காக விளையாட தகுதி பெற்றார், மற்ற வீரர்களும் பல்வேறு பதக்கங்களை வென்றனர்.
போட்டிகள் முடிந்த பின்பு அவர்கள் தமிழகம் திரும்புவதற்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பயணச் சீட்டுடன் ரயிலில் ஏறி அமர்ந்த வீரர்களை ரயில்வே டிக்கெட் பரிசோதகர் சுஜாதா என்பவர் விசாரணை செய்தார்.
அப்போது அவர்களின் விளையாட்டு உபகரணங்களை காரணம் காட்டி ஐந்து வீரர் வீராங்கனைகளை கொல்லம் ரயில் நிலையத்தில் நடுவழியில் இறக்கி விட்டார். இதையடுத்து வீரர்கள் தாங்கள் பதக்கம் வென்று திரும்பிய விவரத்தையும் விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதி உள்ளது என்றும் டிக்கெட் பரிசோதகரிடம் கூறினார்கள். ஆனாலும் அதை ஏற்க மறுத்த டிக்கட் பரிசோதகர் வீரர்கள் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறங்க செய்தார்.
இதனால் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகள் கொல்லம் ரயில் நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது டிக்கெட் பரிசோதகர் நடந்துகொண்ட விதம் வீரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து அவர்கள் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே போலீசாரிடம் புகார் செய்தனர், இதையடுத்து விசாரணை மேற்கொண்டு ரயில்வே கோட்ட அதிகாரி மத்திய ரெயில்வே மந்திரியிடம் புகார் மனு அனுப்புவதாகக் கூறியதோடு அவர்களை மாற்று ரயிலில் அனுப்பி வைத்தார்.
பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்கள் ரயில்வே அதிகாரி அவமரியாதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்களிடையே இது தமிழக வீரர்கள் என்பதால் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu