புரட்டி போட்ட கனமழை - 3 நாட்களுக்கு பின் மீண்டெழுந்தது குமரி.
கன்னியாகுமரி கன மழையால் பாதித்த பகுதிகள்...
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி அதிகாலை வரை கனமழை பெய்தது.
மாவட்டத்தை புரட்டி போடும் அளவிற்கு சுமார் 17 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் இதுவரை காணாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்தது.
மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கனமழை நீடித்ததால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடி எழுதியதைத் தொடர்ந்து அணையிலிருந்து மணிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக திர்பரப்பு அருவி மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன, அப்பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நித்திரவிளை அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்
இதேபோன்று குளச்சல் பகுதியில் ஏவிஎம் கால்வாய் உடைந்து நீர் வெளியேறியதில் சிங்கார வேலன் காலனி, வாணியக்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது மழை வெள்ளத்தின் வேகம் அதிகரிப்பால் வீட்டிலுள்ள உடமைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீதி உள்ள உடமைகளை மீட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள தேவாலயங்கள் அரசு பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நாகர்கோவிலில் புத்தேரி பகுதியில் உள்ள குளம் உடைந்ததில் சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது அப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டிருந்த 800 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன நெல் விவசாயம் முற்றிலும் மழை நீரில் மூழ்கி அழிந்தது, மேலும் 600 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்து உள்ளன.
இதேபோன்று நாகர்கோவில் தெரிசனங்கோப்பு இறச்சகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளங்கள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள் உடைந்ததால் மாவட்டத்தில் சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு விவசாய நிலங்கள் முற்றிலும் நாசமாகி உள்ளன.
மாவட்டம் முழுவதும் 7 வீடுக்க மற்றும் 6 மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன, மேலும் மாவட்டம் முழுவதும் 23 மரங்கள் முறிந்து விழுந்தன.
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் குளம் உடைப்பு ஏற்பட்டது தொடர்ந்து அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மழை வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் இருந்து பொதுமக்களை கயிறு மூலம் மீட்டனர் மேலும் அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட தானியங்களை வழங்கி பாதுகாத்தனர்.
இந்நிலையில் மொத்த பாதிப்புகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது, பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர், விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ள நிலையில் விவசாயிகள் மட்டும் தற்போது உள்ள சூழ்நிலையில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu