குமரியில் விடிய விடிய பெய்த கனமழை: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய நீடித்த நிலையில் மாவட்டம் முழுவதும் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நாற்பத்தி எட்டு அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு தற்போது 6 ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 45.25 அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது பெருமளவில் நீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணைப்பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டுள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் தாழ்வான பகுதியில் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story