திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சென்ற உற்சவ மூர்த்திகள் குமரி திரும்பினர்

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் ஆட்சியின்போது, நவராத்திரி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் அரண்மனையில் வெகுவிமர்சையாக நடந்து வந்தது. 1840-ல் கேரளா சமஸ்தானத்தின் தலைநகர் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
அதன்பின் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் உள்ள பத்பநாபசுவாமி கோவிலில் கொழுமண்டபத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக பத்பநாபாபுரம் அரண்மனையில் உள்ள தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன் உதித்த நங்கை அம்மன் ஆகிய சுவாமி சிலைகள் அரச குடும்பத்தின் முழு ராஜ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டு கொலுவில் வைப்பது வழக்கம்.
மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி அமைந்த பின்னரும் தமிழக கேரளா அரசின் ஒத்துழைப்புடன் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 3 ஆம் தேதி தமிழக கேரளா போலீசாரின் துப்பாக்கி ஏந்திய முழு மரியாதையுடன் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளுடன் சென்ற சுவாமி சிலைகள் நவராத்திரி விழாவிற்கு பின்னர் நேற்று மீண்டும் குமரிக்கு எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் இன்று சுவாமி சிலைகள் குமரி மாவட்டம் வந்தடைந்தன. முன்னதாக இரு மாநில எல்லையான களியக்காவிளையில் கேரளா மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர் கேரளா அரசு அதிகாரிகள் சுவாமி சிலைகளை முறைபடி தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தமிழக போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர் பலத்த பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் எடுத்து வரப்பட்டன. நாளை அந்தந்த கோவில்களுக்கு வரும் சுவாமி சிலைகள் தொடர்ந்து கோவிலில் நித்திய பூஜைக்கு வைக்கப்படும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu