தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பள்ளிகள், வணிக வளாகங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சப்பட்டு வந்த நிலையில் தொடர் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் மேற்பார்வைையில் மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார், உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், சிவசங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இதற்கு முன் திருட்டு வழக்கில் கைதான பழைய குற்றவாளிகளை கொண்டு ஒப்பிட்டு விசாரணை நடத்தியது. அப்போது இந்த திருட்டு வழக்குகளில் ஈடுபட்டது கேரள மாநிலம் நேமம் பகுதியை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் மகன் ஜெஸிம் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஜெஸீமின் தொலைபேசி எண்ணை கண்டறிந்த போலீசார் சைபர் க்ரைம் மூலம் அவனின் இருப்பிடத்தை தேடிய போது அந்த எண் சமீப நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல், இடிந்தகரை, கூடங்குளம் ஆகிய இடங்கள் சென்று பின் மீண்டும் மார்த்தாண்டத்தில் இருப்பதாக காட்டி உள்ளது. பல இடங்களில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு மீண்டும் மார்த்தாண்டம் பகுதிக்கு வந்திருக்கும் ஜெஸீமை போலீசார் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு தேடி வந்த நிலையில் செல்போன் டவரை வைத்து தனிப்படை போலீசார் ஜெஸீமை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் ஜெஸீமிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்பிலான ஜீப், இருசக்கர வாகனம் மற்றும் தொடர்ச்சியாக கடைகளில் உடைத்து திருடப்பட்ட பணம் மற்றும் உடைப்பதற்கு பயன்படுத்திய கம்பிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசாருக்கு தொடர் சவால் விட்டு வந்த ஜெஸீமை போலீசார் சிறையில் அடைத்தனர். இதன் மூலம் மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களில் தொடர்ச்சியாக கடைகள் உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu