சபரிமலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணி துவக்கம்
சபரிமலை (பைல் படம்)
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் படி பூஜையும் ஒன்று. கோவிலில் இரவு பூஜைக்கு பின்னர் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த பூஜைக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு படிபூஜைக்கான முன்பதிவு முடிந்து விட்டது.
படி பூஜை நடைபெறும் போது பூஜைக்கான உபயதாரர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் தவிர பிற பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனிடையே படி பூஜை நடக்கும் போது மழை பெய்தால் பெரும் சிரமம் ஏற்படும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதினெட்டாம்படிக்கு மேல் கண்ணாடி கூரை அமைக்கப் பட்டது. ஆனால் கண்ணாடி மேல் கூரையால் கோவில் கொடிமரத்தில் சூரிய ஒளி நேராக விழுவதில்லை என கோவிலில் நடைபெற்ற தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த கண்ணாடி கூரை அகற்றப்பட்டு அதன் பிறகு படி பூஜையின் போது இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் தார்பால் மூலமாக தற்காலிக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் பதினெட்டாம் படிமேல் தானியங்கி மேல் கூரை அமைக்க சென்னையை சேர்ந்த ஒரு கட்டிட நிறுவனம் முன்வந்துள்ளது. ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த மேற்கூரை அமைக்க மொத்த செலவாக 70 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது.
இந்த ஹைட்ராலிக் மேல்கூரை தேவைப்படும்போது மேற்கூரையாகவும், தேவை இல்லாத நேரத்தில் இருபுறங்களிலும் மடக்கி வைக்கும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கின. முன்னதாக கோவில் சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனிடையே மேற்கூரை அமைக்கும் பணிகள் அனைத்தையும் 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu