குமரியில் 11 ஆம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம்: இளைஞர் போக்சோவில் கைது
கன்னியாகுமரியில் 11 ஆம் வகுப்பு மாணவி மாயமான சம்பவத்தில், செல்போனில் ராங் கால் மூலம் அறிமுகமாகி, காதல் வலை விரித்து கடத்தி சென்ற இளைஞரை நாகை மாவட்டத்தில் சுற்றிவளைத்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியை அடுத்த பேரை எனும் கிராம பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் காணாமல் போனார். அவர் ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர் .
அந்த மாணவியின் செல்போன் நாகப்பட்டினத்தில் இருப்பதாக காட்டி உள்ளது, அதனை வைத்து துப்பு துலக்கிய போலீசார் அங்கு சென்று பார்த்த போது மாயமான மாணவி, அஜின் என்ற இளைஞருடன் அங்கு ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் மார்த்தாண்டம் அழைத்து வந்து விசாரித்த போது செல்போனில் ராங் கால் மூலம் மலர்ந்த வில்லங்க காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
தக்கலை அருகே சரல் பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேரை கிராமத்தில் உள்ள உறவினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது ஒரு எண் தவறுதலானதால், உறவினருக்கு பதில் ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்திய செல்போனில் அந்த மாணவியிடம் பேசி உள்ளார்.
ராங் கால் என்று கூறி மாணவி செல்போன் தொடர்பை துண்டித்த நிலையில், சிறிது நேரம் கழித்து குரல் அழகாக இருப்பதாக கூறி தூண்டில் போட்டுள்ளான் அஜின். முதலில் அவனுடன் பேசுவதை தவிர்த்த அந்த மாணவி, அஜினின் அளவுகடந்த புகழ்ச்சியால் அவனுடன் தொடர்ந்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
இதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட அஜின் அந்த மாணவியை நேரில் சந்திக்கும் ஆவலில் வெளியூர் செல்லலாமா? என்று அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவியை திருப்பி அனுப்பினால் எங்கே தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ என்று எண்ணிய அஜின் அந்த மாணவியை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக லாட்ஜுகளில் தங்கி பொழுதை கழித்துள்ளார் .
இறுதியாக நாகப்பட்டினம் சென்று அங்கு வாடகைக்கு ஒரு வீடு பார்த்து கடந்த 10 நாட்களாக மாணவியுடன் குடித்தனம் நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின் மாணவியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அஜினை கைது செய்தனர்.
தங்கள் குழந்தைகள் ஆன் லைன் வகுப்பில் இருந்தாலும் பெற்றோர் பொறுப்புடன் கவனிக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu