கன்னியாகுமரியிலிருந்து ஊட்டி செல்ல வசதியாக ரயில் இயக்க கோரிக்கை
தென்மாவட்டங்களில் இருந்து தற்போது கோயம்புத்தூர் தினசரி ரயில்கள் மிகக்குறைந்த அளவே இயக்கப்படுகிறது. இதில் நாகர்கோவில் - கோவை பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் - கோவை இரவு நேர ரயில் என இரண்டு ரயில்கள் ஒரு ரயில் பகல் நேரத்தில் இயங்கும் ரயிலாகவும் மற்றொரு ரயில் இரவு நேரத்தில் இயங்கும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாகவும் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மொத்தம் 533 கி.மீ தூரத்தில் இயக்கப்படுகிறது.
மூன்றாவது ரயிலாக திருநெல்வேலியிருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர கோடைகால சிறப்பு ரயிலை ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக பயணம் செய்யும் போது மொத்தம் 459 கி.மீ தூரம் கொண்டு ஈரோடு வழியாக செல்வதை காட்டிலும் 74 கி.மீ பயண நேரம் குறைவாகும். இதனால் அதற்கான கட்டணத்தை குறைத்து செலுத்தி பயணம் செய்தால் போதுமானது.
தற்போது திருநெல்வேலியிருந்து மேட்டுப்பாளையத்துக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு குமரி மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி ரயிலில் ஏறி விருதுநகர் ரயில் நிலையத்தில் 22:18 மணிக்கு இறங்கி அங்கிருந்து 23:10 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலில் ஏறி பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் எளிதாக பயணம் செய்யலாம். இதைப்போல் மறு மார்க்கம் இந்த பகுதிகளிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் விருதுநகர் ரயில் நிலையத்தில் காலை 3:00 மணிக்கு இறங்கி விட்டு அங்கிருந்து 3:35 மணிக்கு வரும் பெங்களூர் - நாகர்கோவில் ரயிலில் ஏறி குமரி மாவட்டத்திற்கு பயணம் செய்ய முடியும்.
கன்னியாகுமரி – மேட்டுப்பாளையம் இரவு நேர ரயில்:- (வழி பழநி, உடுமலைபேட்டை)
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வரை அகல ரயில் பாதையும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதையும் மலை ரயில் பாதையும் உள்ளது. இதில் மீட்டர் கேஜ் பாதையில் உள்ள தினசரி ஒரே ஒரு மலை ரயில் பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. தற்போது சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு சூப்பர் பாஸ்ட் ரயில் ஊட்டி பயணிகள் ரயிலில் பயணிக்கும் விதத்தில் கால அட்டவணை அமைத்து இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து நேரடியாக மேட்டுப்பாளையத்துக்கு செல்ல ரயில் வசதி இல்லை. இங்கிருந்து செல்லும் இரவு ரயிலில் கோவை சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலில் செல்ல முடியும். இவ்வாறு சென்றாலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் மலை ரயிலில் பயணிக்க முடியாது. தென்மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு ரயிலில் செல்ல நேரடியாக ரயில் வசதி இல்லாத காரணத்தால் இங்கிருந்து செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலாவிற்கு என செல்பவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இவ்வாறு பேருந்தில் செல்லும் பயணிகள் மலைப்பகுதியில் செல்லும் போது மயக்கம், வாந்தி என பல்வேறு இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
தமிழகத்தின் கடைசி மாவட்டம் மற்றும் சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு பயணிக்கும் மலை ரயிலுக்கு இணைப்பு ரயிலாக இருக்கும் விதத்தில் கால அட்டவணை அமைத்து இயக்க வேண்டும்.என பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu