ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மரியசெல்வி(75) ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் 16.03.2022 அன்று காலை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியரை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 6 1/4 பவுன் எடை கொண்ட தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார்கள்.
தொடர்ந்து மரிய செல்வி இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் மேற்பார்வையில் நேசமணி நகர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெய லெட்சுமி, உதவி ஆய்வாளர் முத்துக்குட்டி தனிப்படை உதவி ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள CCTV கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செயினை பறித்து சென்றது மேல ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த சேவியர் வின்ஸ்லின்(24) மற்றும் ஸ்டாலின்(25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க அந்த பகுதியில் இருந்த CCTV கேமராக்கள் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதில் CCTV கேமராவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வீடுகள், வணிகவளாகங்கள், பொது இடங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் CCTV பொருத்தும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu