மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியுடன் புதியதாக ஊராட்சிகளை இணைப்பதை அரசு கைவிட வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான என்.தளவாய்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கணியன்குளம், தருமபுரம், ராஜாக்கமங்கலம், ராமபுரம், தேரேகால்புதூர் உள்ளிட் 15 கிராம பஞ்சாயத்துகளும் ஆளூர், சுசீந்திரம், புத்தளம், தேரூர், தெங்கம்புதூர், கணபதிபுரம் ஆகிய 6 பேரூராட்சி பகுதிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் இணையும் போது ஊராட்சிகளின் தனித்தன்மையை இழக்க நேரிடும். ஊராட்சிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியுடன் இணைக்கப்படும் போது இப்பகுதி மக்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை இந்த பகுதி மக்களும் விரும்பவில்லை மேலும் ஊராட்சி பகுதிகளில் 90 சதவீத பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி செய்து ஊதியம் பெற்று வருகின்றனர் .
ஏற்கனவே கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈசாந்திமங்களம், இறச்சகுளம், தாழக்குடி, பூதப்பாண்டி, பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சியுடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மாநகராட்சி ஆக மாறும் போது இந்த வாய்ப்பை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் மேலும் ஒரு மாநகராட்சியாக செயல்படுவதற்கு 2 லட்சம் மக்கள் தொகையை போதுமானது.
தற்போது நாகர்கோவில் மாநகராட்சி 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது, ஏற்கனவே நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் இன்றுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மேலும் கூடுதலாக ஊராட்சிகளை இணைக்கும் போது பல்வேறு சிரமங்கள் இப்பகுதி மக்களுக்கு ஏற்படும் குறிப்பாக வீட்டு வரி உயர்வு குடிநீர் கட்டண உயர்வு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு கூடுதல் அனுமதி கட்டணம் போன்ற பல்வேறு சிரமங்களை மக்கள் சந்திக்க நேரிடும்.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி புதியதாக ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பதே கைவிட வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu