சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன சிசிடிவி கேமராக்கள்

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன சிசிடிவி கேமராக்கள்
X

குமரியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள அதி நவீன சிசிடிவி கேமிரா.

குமரி முக்கடல் அணையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது முக்கடல் அணை.

தற்போது நாகர்கோவில் மாநகராட்சியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணையில் பொதுமக்கள் பொழுது போக்கும் வண்ணம் பூங்காக்கள் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படப்பிடிப்புகள் நடத்துவதற்கும் அங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் கட்டணத்துடன் கூடிய அனுமதியை மாநகராட்சி நிர்வாகம் அளித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முக்கடல் அணை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

ஏற்கனவே இந்த அணை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறுத்தை புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அதனை பிடிக்கவும் மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இருட்டிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அணைப் பகுதி முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே அணையை சுற்றி மூன்று பகுதிகளிலும் அடர்ந்த மலை காடுகள் இருப்பதால் அங்கிருந்து விலங்குகள் அணைக்கு வந்து இருக்கலாம் என கூறியுள்ள வனத்துறை சிறுத்தை புலியை பிடித்து மீண்டும் காட்டில் விடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!