முதல்வர் வருகையால் தரமற்ற சாலை பணி:நாகர்கோவில் மக்கள் புகார்
முதல்வர் வருகையால் நாகர்கோவிலில் தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார்சாலை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பல மாநில சாலைகள் கடந்த 8 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையால் பழுதடைந்த நிலையில் இதுநாள் வரை சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்த பழுதான சாலையால் தொடர் விபத்துகள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக செப்பனிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு முடிவு காணப்படாத நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் வருகையால், அவர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையில் அவசரகதியில் செப்பனிடும் பணி நடந்தது. அப்போது சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டதோடு, காலை நேரத்தில் நடைபெற்றதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
மேலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட சாலையை தமிழக முதல்வர் வருகையையொட்டி அவசர கதியில் தரமில்லாமல் செப்பனிடுவது பொதுமக்களுக்கு எந்தவித பலனும் இல்லை என்றும், அவசரகதியில் தரமில்லாமல் நடைபெறும் சாலை செப்பனிடும் பணியால் மக்களின் வரிப்பணம் மட்டும் தான் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu