சுதந்திர அமுது பெருவிழா சைக்கிள் போட்டி: அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு

சுதந்திர அமுது பெருவிழா சைக்கிள் போட்டி: அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு
X

சைக்கிள் போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ், தொடங்கி வைத்து  பங்கேற்றார்,

குமரியில் சுதந்திர அமுது பெருவிழாவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்று சைக்கிள் ஓட்டினர்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், சுதந்திர அமுது பெருவிழா நிகழ்ச்சி, ஒரு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மாரத்தான் போட்டி, மணல் சிற்பம் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளது, 4-வது நாள் நிகழ்ச்சியாக சைக்கிள் போட்டி நடந்தது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மேயருமான மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ், தொடங்கி வைத்து சைக்கிள் போட்டியில் பங்கேற்றார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டி பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், வடசேரி, வேப்பமூடு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிக்குளம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது.

ஆண்கள் பிரிவில் நாகர்கோவில் அனந்தநாடார் குடி அரசு பள்ளி மாணவன் ஆதித்யா வேலன் முதல் பரிசும், மாணவர் அபினேஷ் 2-வது பரிசும், சுரேஷ்பாபு 3-வது பரிசும் பெற்றனர். பெண்களுக்கான பிரிவில் ஜோசப் கான்வெண்ட் பள்ளி மாணவி கோமதி முதல் பரிசும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்தின் மனைவி விஷாலா 2-வது பரிசும், ஆஷிலா 3-வது பரிசும் பெற்றனர். பரிசு பெற்றவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டினார். நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

Tags

Next Story