பணியின் போது மின்சாரம் தாக்கியதில் சமையல் மாஸ்டர் பரிதாப பலி

பணியின் போது மின்சாரம் தாக்கியதில் சமையல் மாஸ்டர் பரிதாப பலி
X

பைல் படம்.

ஹோட்டலில் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் சமையல் மாஸ்டர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35), கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பூதப்பாண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்திக் வழக்கம் போல் ஹோட்டலில் வேலைக்கு சென்ற நிலையில் அங்கு தோசைக்கு மாவு அரைப்பதற்கு கிரைண்டரில் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக்கின் உடல் முழுவதும் கருகிய நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டு பூதப்பாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில், இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ஹோட்டலில் மின்சாரம் பாய்ந்து சமையல் மாஸ்டர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!