சிறப்பு எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் : ஒருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு கல்லுப்பாலத்தை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செலின்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் ஒரு நபரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் (எஸ்எஸ்ஐ) உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த 3 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு இடைக்கோடு கல்லுப்பாலத்தில் வீட்டில் இருந்த போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
தகவறிந்து அங்கு விரைந்து வந்த குழித்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்த நிலையில், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்து தெரியவந்தது. போலீசார் விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான தடயங்கள் கிடைத்தன. அருகில் உள்ள வீடுகளில் உள்ள கேமரா காட்சிகளை பார்த்தபோது இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனிடையே அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கேரளா போலீசார் உதவியுடன் தமிழக கேரள எல்லை சோதனைச் சாவடியில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் நடத்திய தீவிர தேடுதலின்போது பெட்ரோல் குண்டு வீசிய அருண் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் வழக்கொன்றில் உதவி ஆய்வாளர் மீது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பழிவாங்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி விஜயலால் என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu