Nagercoil Vigilance raid நாகர்கோவிலில்அரசு பணியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Nagercoil Vigilance raid
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வந்தார்.இவரது மகன் மகேஷ். தந்தை இறந்ததையடுத்து இவர் பொதுப்பணி துறையில் உதவியாளராக சேர்ந்தார். தற்பொழுது மகேஷ் அயலகப் பணியாக மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2013 முதல் 2022 ஆண்டு வரை காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2½ கோடி சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவில் உள்ள மகேஷ் வீட்டிற்கு சென்றனர்.வீட்டில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். அப்போது 10 ஆண்டுகளில் 8 வீடுகள் கட்டியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளது. அந்த ஆவணங்களை வைத்து மகேஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.வீடுகள் எந்த பணத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.
மகேஷின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். அவரது சம்பளத்தை விட அதிகமான அளவிற்கு வருமானம் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.காலை 7.15 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. மகேஷ் எங்கெல்லாம் வீடு கட்டியுள்ளார் என்பது குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சார்பதிவாளர் ஒருவர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu