குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரவலை ஏற்படுத்திய நேர்காணல்

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரவலை ஏற்படுத்திய நேர்காணல்
X

நேர்காணலுக்கு வந்தவர்கள் சமூக இடைவெளி இன்றி மருத்துவ கல்லூரி வளாகத்தில் காத்திருக்கும் காட்சி.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரவலை ஏற்படுத்தும் விதமாக சமூக இடைவெளி இல்லாமல் நேர்காணல் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தற்காலிகமாக பணியாற்ற 30 மருத்துவர்கள், 120 செவிலியர்கள், 20 லேப் டெக்னீசியன்கள், 20 டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், 200 கடைநிலை உதவியாளர்கள், 100 மருந்தாக கையாளுநர் என 490 பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று 26 ஆம் தேதி தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நேர்காணல் நடைபெற வில்லை.

இந்நிலையில் இன்று நேர்காணல் தொடங்கிய நிலையில் காலை முதல் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூடியதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் நீண்ட நேரம் காவல் நின்றதால் பாதிப்படைந்த நேர்காணலுக்கு வந்தவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதால் மருத்துவ மனை ஊழியர்களுக்கும் நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேர்காணலை வேறு இடத்தில் நடத்தாமல் மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே நடத்தியதோடு முறையான ஏற்பாடுகளை செய்யாததே இந்த நிலைக்கு காரணம் என குற்றம் சாட்டிய சமூக ஆர்வலர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்