பறவை காய்ச்சல் - குமரி எல்லையில் தடுப்பு பணி தீவிரம்
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவுவதால் கேரள தமிழக எல்லையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவுவது வழக்கம். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான கோழிகளை கேரள சுகாதாரத்துறையினர் அழித்து நோய் பரவல் அதிகரிக்காமல் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டும் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வளர்ப்பு பறவைகளான வாத்து, கோழி உட்பட அனைத்து விதமான பறவைகள் கடந்த ஒரு சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு இறந்து வருகின்றன.
இதனையடுத்து கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் பறவைகளின் இறப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதில் இறந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கேரள அரசு காய்ச்சலால் பாதிக்கபட்ட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க உத்தரவிட்டனர்.இதனையடுத்து இந்த நோய் தொற்று குமரி மாவட்டத்திலும் பரவாமல் தடுக்க தமிழக கேரள எல்லை பகுதியான படந்தாலுமூடு பகுதியில் கால்நடைத்துறையினர் முகாம் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மேலும் கேரளாவில் இருந்து கோழித்தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu