புத்தாண்டு தடை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: குமரி எஸ்.பி எச்சரிக்கை

புத்தாண்டு தடை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: குமரி எஸ்.பி எச்சரிக்கை
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் 

குமரியில் புத்தாண்டு தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைந்து போன செல்போன்கள் காவல்துறையால் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு முழுவதும் தொலைந்து போன 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள 543 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 33 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 25 ஆக குறைந்துள்ளது என கூறினார்.

குமரி மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு 119 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இந்த ஆண்டு மட்டும் 701 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 322 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வரும் புத்தாண்டையொட்டி சுற்றுலா பகுதிகளில் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பான கண்காணிப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் மாவட்டத்தின் பல்வேறு 50 முக்கிய பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மது அருந்தி வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!