காவல் துறையினருக்கான குறைதீர்க்கும் கூட்டம்: போலீசார் மகிழ்ச்சி

குமரியில் காவல் துறையினருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் ஆளினார்களுக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கான குறை தீர் கூட்டம் இன்று நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் காவல் ஆளினார்கள் குறைகளை கூறி மனு அளித்தனர்.

பணியிடை மாறுதல், பணி உயர்வு, தண்டனை ரத்து செய்தல், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு காரணங்களை கூறி அளிக்கப்பட்ட இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு காவலர்களின் குறைகள் களையப்படும் என்றும் அனைத்து மாதங்களிலும் இந்த குறை தீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து தங்கள் குறைகளை கூற அனுமதியும் நேரமும் இல்லை என்ற நிலையே நீடித்து வந்த நிலையில், அரசு உத்தரவுப்படி குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!