நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் மணிக்கூண்டு கோபுரமும், கடிகாரமும்

நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் மணிக்கூண்டு கோபுரமும், கடிகாரமும்
X
நாகர்கோவிலின் அடையாளமாக காணப்படும் மணிக்கூண்டும், கோபுரமும் நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாமல் காட்சி அளிக்கிறது.

திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சியின் போது 1888 முதல் 1906 ஆம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்தை சார்ந்த, சில வருட இடைவெளி கொண்டு, தமது பழமையை இன்றும் பறைசாற்றி நிற்கும் மிக குறிப்பிட தகுந்த சிறந்த கட்டுமானங்களில் மூன்று இவை.

1) சுசீந்திரம் கோயில் கோபுரம் (ஆண்டு - 1888)

2) நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரம் (ஆண்டு - 1893)

3) பேச்சிபாறை அணைக்கட்டு ( ஆண்டு - 1906)

1888 ல் சுசீந்திரம் கோவில் கோபுரம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

பேச்சிபாறை அணைக்கட்டு 1852ல் திட்டமிடப்பட்டு, 1894ல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 1906 ல் கட்டி முடிக்கப்பட்டது.

ஐரோப்பிய பொறியாளர்கள் கேப்டன் ஹார்ஸ்லி(Horsely) மற்றும் ஹோஜிஅர்ஃப்(Hogeorff) ஆகியோர் நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரம் வடிவமைப்பை திட்டமிட்டவர்கள்.

இவர்கள் பேச்சிபாறை அணைக்கட்டு பணிகளிலும் ஈடுப்பட்ட பொறியாளர்கள் ஆவார்கள், பேச்சிபாறை அணையின் திட்டம் ஹார்ஸ்லியால் வடிவமைக்கப்பட்டு அது பலமுறை தள்ளிப்போடப்பட்டும் அவரின் கருத்துருப்படியே பின்னர் கட்டி முடிக்கப்பட்டது.

1893ல் நாகர்கோயில் பகுதிக்கு வருகை தந்த திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள் நாகர்கோயிலில் நினைவுச்சின்னம் எழுப்பிட போடப்பட்ட திட்டமே இந்த மணிக்கூண்டு கோபுரம்.

கோபுர அமைப்பு குழு மிஷனரியை சார்ந்த ஜேம்ஸ் டதி, திருவாங்கூர் அரசு பொறியாளர்கள் ஹார்ஸ்லி(Horsely), ஹோஜிஅர்ஃப்(Hogeorff), திருவாங்கூர் அரசு அதிகாரிகள் ஆர். கிருஷ்ண அய்யர், இரத்தினசுவாமி அய்யர் ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்டது.

டாக்டர் ஜேம்ஸ் டதியின் மனைவி டதி நாகர்கோயிலில் துவக்கிய மிஷனரி பள்ளிக்கு என்று வாங்கப்பட்ட கடிகாரம், ஸ்ரீமூலம் திருநாள் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்களுக்காக மணிக்கூண்டு கோபுரத்தில் வைக்கப்பட்டது.

கடிகாரத்தின் மணியோசை அன்று 3 கிமீ சுற்றளவிற்கு கேட்கும் அளவிற்கு இருந்தது, மேலும் டதியின் வேண்டுகோளுக்கு இணங்க கடிகாரம் கல்கோவில் பார்த்து அமைக்கப்பட்டது.

கே.கே குருவிலா என்பவரின் மேற்பார்வையில் மணிக்கூண்டு கோபுரமும் கடிகாராமும் அமைக்கும் பணிகள் 1892 ஜூலையில் தொடங்கி 1893 பிப்ரவரி 15 தியதி ஸ்ரீமூலம் திருநாளால் திறக்கப்பட்டது.

அன்று இந்த மணிக்கூண்டை வடிவமைக்க ஆன மொத்த செலவு 3258 ரூபாய் 9 சக்கரம் 12 காசுகள் ஆனது. இதில் மன்னர் 1117 ரூபாயும் டதி 164 ரூபாயும் பொதுமக்களிடம் நன்கொடையாக மீதபணமும் பெறப்பட்டது.

மணிக்கூண்டு கோபுரத்தில் RV என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன, அது திருவாங்கூர் ஆட்சியாளர்களை இராமவர்மா என்று குறிப்பிடப்படுவதின் சுருக்கம் ஆக உள்ளது.

மணிக்கூண்டு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கடிகாரம் லண்டனில் இருந்த டர்பி ஜான் ஸ்மித் அண்ட் சன்ஸ் கம்பெனியால் செய்யப்பட்டது.

அந்த கடிகார ஊசல் 60 அடி நீள சங்கிலி, கப்பியில் பொருத்தப்பட்டு பளு கொண்டு கடிகாரத்தின் பல் சக்கரங்களை நகர்த்த புவியீர்ப்பு விசையை பயன்படுத்தும் விதமான இயங்கும் தன்மையை கொண்டு அமைக்கப்பட்டது.

நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மணிக்கூண்டு கோபுரம் நாகர்கோவில் மாநகரின் அடையாள சின்னமாகவும் காணப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!