அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 12 மணி நேரம் சோதனை

அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 12 மணி நேரம் சோதனை
X

கன்னியாகுமரி அரசு அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 12 மணி நேரம் சோதனை நடத்தி ரூ.23 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றினர்.

குமரி அரசு அலுவலக உதவியாளர் வீட்டில் சுமார் 12 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்று சுமார் 23 லட்ச ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பொதுப்பணித்துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து தற்போது அயல் பணியாக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேலாயுத பெருமாள் என்பவரது மகன் சுமார் 45 வயது உள்ள மகேஷ் என்பவரது வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று காலை 7.15 மணி முதல் நடத்திய சோதனை 12 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.

2013 - 2022 வரையான காலகட்டங்களில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடைபெற்ற சோதனையில் சுமார் 23 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி அரசு அலுவலக உதவியாளர் மகேஷின் வீடு அமைந்துள்ள நாகர்கோவில் அருகே சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமீபம் கேசவன் புதூரில் ஐயா குட்டி நாடார் தெருவில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் சுமார் 23 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வருமானத்திற்கு அதிகமாக இரண்டரை கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 23 லட்ச ரூபாய்க்கான ஆவணங்களையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய பணத்தில் பல வீடுகள் கட்டியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு முன் குமரி லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் சிக்கிய தக்கலை மதுவிலக்கு காவல் பிரிவில் பணிபுரிந்த கணேசன் என்பவரது மருமகன் தான் மகேஷ் என்று கூறப்படுகிறது. சாதாரணமான ஒரு அலுவலக உதவியாளர் சுமார் பத்து வருடங்களில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளும் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சாதாரணமாக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்யும் வழக்குகளில் குறிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள சொத்து ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே கணக்கில் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம். அதுபோல தற்போது லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள தொகை வருமானத்திற்கு அதிகமாக இரண்டரை கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறப்படும் சம்பவத்தில் கூட இன்றைய சந்தை மதிப்பு என்று கணக்கிடும்போது அது பல கோடி ரூபாய்களுக்கான சந்தை மதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாதாரணமாக ஒரு சென்டு நிலம் அரசு நிர்ணயித்து உள்ள விலை மதிப்பு ஒரு லட்ச ரூபாய் என்று இருந்தால் அந்த இடத்தில் தற்போதைய சந்தை மதிப்பில் இடத்திற்கு தகுந்தாற்போல் குறைந்த பட்சம் 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி சந்தை மதிப்பில் கணக்கிட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள இரண்டரை கோடி ரூபாய் என்பது சுமார் 10 மடங்குக்கும் மேலான தொகையின் சந்தை மதிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சாதாரண அரசு அலுவலக உதவியாளர் ஒருவரே வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண கடைநிலை ஊழியர் வருமானத்துக்கு அதிகமாக இவ்வளவு சொத்து சேர்த்திருந்தால் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் உயர் பதவியில் உள்ள, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எவ்வளவு சொத்து சேர்த்திருப்பார்கள் என்பது கற்பனைக்கு கூட எட்டாத நிலையில் உள்ளது. குறிப்பாக கனிமவளக் கொள்ளையில் பல்வேறு துறை அதிகாரிகளும் வருமானத்துக்கு அதிகமாக அதிக அளவு சொத்து சேர்த்திருப்பார்கள் என்று கூறப்படும் சம்பவங்கள் மறுக்க இயலாதவை என்றும் அவை உண்மை என்றும் கூறுவது தற்போதைய லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும் தற்போது அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்து உள்ளார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் நாட்களில் லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள பலரின் சொத்து விபரங்களையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு சேகரித்து வருவதாகவும் விரைவில் அதிரடி நடவடிக்கைகள் வெளியாகும் என்று கூறப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் தங்களது அதிரடி நடவடிக்கை மூலம் குமரி மாவட்டத்தில் லஞ்சத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!