அரசு மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்ட 6 மாத கர்ப்பிணி

அரசு மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்ட 6 மாத கர்ப்பிணி
X

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்த விசு மற்றும் இவரது மனைவி ஷீபா.

கர்ப்பிணியை வார்டில் கட்டில் காலி இல்லை எனக் கூறி அலைக்கழிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் விசு, இவரது மனைவி ஷீபா.

ஆறு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வியாழனன்று வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறி, ஒரு வார்டில் அனுமதித்தனர். அவருக்கு டெங்கு தொடர்பான அறிகுறி தெரியாத நிலையில், தனியார் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனை முடிவில் டெங்கு பாதிப்புக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மருத்துவர்களிடம் தங்களது குழப்பம் குறித்து கூறினர். ஆனால் அவரை அங்கிருந்து விடுவிக்க மறுத்த மருத்துவர்கள், ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வார்டில் கட்டில் காலியில்லை எனக் கூறி, இரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க செய்தனர். கர்ப்பிணியான தனக்கு நீண்ட நேரம் அமர முடியாது எனவும் சிறிது நேரம் தூங்க வேண்டும் எனக் கூறிய நிலையிலும், கட்டில் காலியானால் மட்டுமே அந்த வார்டில் அனுமதிக்க முடியும் என கூறி காத்திருக்க வைத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக ஷீபாவின் குடும்பத்தினர் மருத்துவர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, நள்ளிரவில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா இல்லையா என உறுதியாக தெரியாததால் குழப்பம் அடைந்த குடும்பத்தினர், ஷீபாவை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு அனுமதிப்பதா அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதா என்ற குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டனர். கர்ப்பிணியை வார்டில் கட்டில் காலி இல்லை எனக் கூறி நீண்ட நேரம் காத்திருக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா