டவ்-தே பாதிப்பு -உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி.
தென் மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்ற நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கடல் சீற்றம் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பை சந்தித்தது.
மேலும் இரண்டு வீடுகள் இடிந்து இரண்டு நபர்கள் உயிரிழந்தனர், இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி முதல்வர் பொது நிவாரண நிதியை வழங்க தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.
தொடர்ந்து தேங்காய்ப்பட்டனம், மொழிக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் முதல்வர் பொது நிவாரண நிதியை அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாதிப்புகளை சரிசெய்யவும், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது தங்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர் இவை அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu