மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
X

நாகர்கோவிலில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகே வலம்புரிவிளையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கடும் அவதி அடைந்து வந்தனர்.இதனால் இந்த குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் காற்றின் வேகம் காரணமாக கொழுந்துவிட்டு எரிந்த தீ கிடங்கில் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை தொடங்கினாலும் தீ பல்வேறு இடங்களுக்கு பரவியதால் அதனை கட்டுப்படுத்துவது சவாலாக அமைந்தது.

இதனை தொடர்ந்து நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தக்கலை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டும் பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறிவிட்டும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனிடையே துர்நாற்றத்துடன் கூடிய கடும் புகை காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!