பேஸ்புக்கால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்

பேஸ்புக்கால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்
X

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் பிரச்சனையால் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன நபர் சமூக வலைத்தளம் மூலம் கண்டறியப்பட்டு குடும்பத்தினருடன் இணைந்தார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தம் (45), கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் பகுதியில் சுற்றி திரிந்த இவர் பெரும்பாலும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி., அலுவலகம் அருகே உள்ள அரசு பள்ளி மர அடியிலேயே அமர்ந்து இருப்பார்.இவருக்கு அப்பகுதியை சேர்ந்த கடைவாசிகள் உணவளித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தடை உத்தரவு காலங்களில் சாலையில் ஆதரவின்றி தவித்தவர்களை தேடி சென்று உணவளித்த தினேஷ் என்பவர் ஆனந்தத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தினேஷ் சமூக வலைதளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

இதனை பார்த்த ஆனந்தத்தின் உறவினர்கள் தினேஷை தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது ஆனந்தம் நாகர்கோவிலில் இருப்பதை தெரிந்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் வந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு மகனைப் பார்த்த ஆனந்தத்தின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர், தொடர்ந்து அவரை குளிக்க வைத்து புது ஆடைகள் அணிவித்த உறவினர்கள் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் உதவியுடன் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

ஆனந்தம் புதுச்சேரியில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் வசதி இல்லாத காரணத்தால் அந்தப் பெண்ணின் பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இது தொடர்பாக பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆனந்தம் பேசியபோது அவரது உறவினர்கள் ஆனந்தை தலையில் தாக்கியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.2 வருடங்களுக்கு பின்னர் மகனை கண்டுபிடித்த தாயின் அரவணைப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆனந்தம் சென்ற காட்சி அப்பகுதி மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்ததோடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!