சிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டம் தொடங்கியது

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான சிவராத்திரி விழா இன்றும் நாளையும் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் 12 வரலாற்று சிறப்பு மிக்க சிவ ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களில் ஆண்டு தோறும் சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் காலோட்டமாக வந்து இந்த 12 கோவில்களையும் தரிசித்து செல்வர்.
இதறக்காக வரும் பக்தர்கள் அனைவரும் முதல் கோவிலான முன்சிறை பகுதியில் அமைந்திருக்கும் திருமலை மஹாதேவர் ஆலயத்திற்கு வந்து அங்கு வழிபாடுகள் நடத்தி அங்கிருந்து சிவாலய ஓட்டத்தை துவங்குவது வழக்கம்.
சிவராத்திரி தினத்தில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்து கொள்ள சிவ பக்தர்கள் விடிய, விடிய கண்விழித்து தூங்காமல் காலோட்டமாக ஓடி சிவாலயங்களில் தரிசனம் செய்வார்கள்.
இதற்க்காக வரும் பக்தர்கள் காவி உடை உடுத்தி, கையில் விசிறி, இடுப்பில் திருநீற்று பையுடன் கோபாலா, கோவிந்தா என்று கோஷம் இட்டவாறு ஓடிச் செல்வர். முதல் கோவிலில் இருந்து இன்று மாலை துவங்கிய இந்த ஓட்டம் இரண்டாவது கோவிலான திக்குறிச்சிக்கு சென்று சிவனை தரிசித்து விட்டு அடுத்தபடியாக உள்ள திற்பரப்பு, திருநந்திக்கரை ஆகிய கோவில்களை தரிசனம் செய்வர்.
தொடர்ந்து நள்ளிரவில் பொன்மனை கோவில் வந்து சேர்வர். அங்கு இரவை கழித்து விட்டு நாளை அதிகாலையில் பன்றிபாகம் கோவிலில் முதல் தரிசனத்தை துவங்கி கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு கோயில்களில் வழிபட்டு விட்டு நாளை இரவு திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு ஒன்றாக காட்சியளிக்கும் சங்கர நாராயணர் கோயிலில் ஒட்டத்தை நிறைவு செய்வார்கள்.
இந்த பக்தர்கள் சுமார் 110 கி.மீ. தூரம் ஓடி ஆலயங்களில் தரிசனம் செய்து முடிப்பார்கள். இதே போல் நாளை காலையில் இருந்து கார், பைக்குகளிலும் பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்வார்கள். சிவாலய ஓட்டத்தில் வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும், குளிர்பானங்கள், இளநீர், வாழைபழம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வழங்குவார்கள்.
12 சிவாலயங்களிலும் மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரியையொட்டி 11ம் தேதி நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu