ஏமாற்றம் தந்த ராகுல்காந்தி

ஏமாற்றம்  தந்த  ராகுல்காந்தி
X
காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றிய ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி களியக்காவிளையில் தனது பயணத்தை முடிக்கும் ராகுல்காந்தி வழியில் 9 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அமைந்துள்ள இந்திரா காந்தி சிலை முன்பு ஏராளமான பொருட்செலவில் பொது மக்களை கூட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய காவல்துறையினர் கயிறுகள் கட்டி தொண்டர்களை ஒழுங்கு படுத்தினர்.

ஆனால் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்காத காங்கிரஸ் கட்சியினர் சாலையில் குவிந்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியில் அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருந்தது. இதனிடையே ராகுல்காந்திக்கு முன்பாக ஸ்பாட்டிற்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களது காரில் இருந்து கட்டு கட்டாக கொடிகளை இறக்கி போட அதனை ஏந்திய படிதான் நிற்க வேண்டும் என கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்களை வலியுறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ராகுல் காந்தியை வரவேற்க கேரள செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு மேளதாளங்களுடன் தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த ராகுல் காந்தி பொதுமக்கள் மத்தியில் பேசாமல் தனது வாகனத்திலிருந்து ஒரு சில வினாடிகளில் டாட்டா காட்டிவிட்டு நிற்காமல் சென்றார். இதனால் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பூசல் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய சந்திப்பாகவும் மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ள நாகர்கோவிலில் ராகுல் காந்தியை பேசவிடாமல் அழைத்து சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே தேர்தல் விதிமுறைகளை மீறி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான பதாகைகளை காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த நிலையில் அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு