குமரியில் கனமழையால் தீவாக மாறும் கிராமங்கள்: கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு

குமரியில் கனமழையால் தீவாக மாறும் கிராமங்கள்: கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு
X
குமரியில் கனமழையால் கிராமங்கள் தீவாக மாறும் நிலையில் அரசு கண்டுகொள்ளாததால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வற்றாத நீராதாரமாக விளங்கி வரும் தாமிரபரணி ஆற்று தண்ணீர் கடலுடன் கலக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது வைக்கல்லூர், பருத்திக்கடவு பகுதிகள். இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 17 ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றுநீர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலத்த சேதங்கங்களை ஏற்படுத்தியது. மேலும் இந்த தண்ணீர் ஆற்றில் அதிவேகமாக அடித்து செல்லும் போது ஏற்பட்ட மணல் அரிப்பின் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 50 ஏக்கர் நிலப்பகுதிகள் அனைத்தும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உள்ளன.

இந்த நிகழ்வு தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பருத்திக்கடவு பகுதியில் உள்ள சாலை துண்டிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனை மீட்க ஊர்மக்கள் சாக்குகளில் மணல் நிரப்பி தடுப்பு சுவர் அமைத்தும் பயன் இல்லாமல் போய் உள்ளது.

இந்த சாலை துண்டிக்கப்பட்டால் வைக்கல்லூர் பகுதி ஒரு தீவு போல் மாறிவிடும் என்பதால் இது சம்பந்தமாக ஊர்மக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை கண்டித்து எவ்வாறு போராட்டங்கள் முன்னெடுப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வைக்கல்லூர் ஊர்மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story