குமரியில் அனுமதியின்றி உண்ணாவிரதம்: எம்எல்ஏ உட்பட 60 க்கும் மேற்பட்டோர் கைது
குமரியில் அனுமதி இல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ உட்பட 60 க்கும் மேற்பட்டோர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை கிராமத்துக்குட்பட்ட தொழிக்கோடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த பகுதி வழியாக நடைபாதை செல்கிறது. இதனை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் நடைபாதையை தனி நபர் ஒருவர் முள்வேலி போட்டு அடைத்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வர முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக ஊர்மக்கள் சம்மந்தபட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழியை நடைமுறைபடுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஆனால் சம்மந்தபட்ட துறையினர் ஆக்ரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரிடம் முறையிட்டதை தொடர்ந்து தொழிக்கோடு சந்திப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து முள்வேலியை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தை கைவிட எச்சரித்தனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வெயிலில் அமர்ந்து எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரசார் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாகர்கோவில் எ.டி.எஸ்.பி ஈஸ்வரன், கிள்ளியூர் தாசில்தார் திருவாளி, வருவாய் ஆய்வாளர் ஜெயசந்திரன், கிராம அலுவலர் எழிலரசு உட்பட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ உட்பட 60 க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu