நிவாரண முகாம் செல்பவர் வீடுகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்: பொதுமக்கள் அச்சம்
காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் முன்சிறை பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு தொடங்கிய கனமழை சுமார் 34 மணிநேரம் கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக மலையோர பகுதிகளிலும் பலத்த மழையின் காரணமாக அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதன்படி அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் மழை நின்று கடந்த இரண்டு நாட்கள் கடந்தும் வெள்ள பாதிப்புகள் குறையாமல் உள்ளது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டு உள்ள காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் முன்சிறை பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும் அப்பகுதியில் மின்சாரமும் தடைபட்டு உள்ளதால் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இன்றி முன்சிறை பகுதி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மேலும் ஏராளமான வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. இப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் உணவு கூட இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நிவாரண முகாம்கள் சென்று உணவு அருந்தலாம் என்றால் முன்சிறை பகுதியில் இருந்து பேருந்து வசதி இன்றி சுமார் 2 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் நிவாரண முகாமிற்கு சென்று வருவதற்குள் வீட்டில் உள்ள பொருட்கள் சூறையாடப்படுவதாகவும் காவல்துறையினர் இந்த பகுதியில் எட்டி கூட பார்ப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வெள்ள சேதத்தை பார்க்க வந்த அமைச்சர் இரவு நேரத்தில் சாலையில் நின்று பார்த்து விட்டு சென்றால் எங்கள் பிரச்சனை எப்படி அரசிற்கு தெரியும், அரசும், அதிகாரிகளும் செய்யும் தவறினால் பொதுமக்களாகிய நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம் என்றும் வாக்குக்கு மட்டுமே எங்கள் பகுதி எம்.பி, எம்.எல்.ஏ க்கள் தங்கள் பகுதிக்கு வருவதாக ஆதங்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu