உடைப்பில் இருந்து வெளியேறும் நீரே குடிநீர் - 70 வயது பாஞ்சாலி மூதாட்டியின் சோக புன்னகை

உடைப்பில் இருந்து வெளியேறும் நீரை குடிநீராக பயன்படுத்தி தனிமையில் வாழும் 70 வயது பாஞ்சாலி மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கடை கருங்கல் சாலை ஓரம் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார் 70 வயதான பாஞ்சாலி பாட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். அவர்கள் அனைவரக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளார். தற்போது கணவர் இறந்த நிலையில் தனிமையில் இருந்து வருகிறார். இவர் தனது வீட்டின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் தண்ணீரை வீட்டின் அருகில் இருக்கும் தெருகுழாயில் இருந்து எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1 வருடமாக அந்த குழாயில் தண்ணீர் வராமல், குழாய் முழுதும் குப்பைகள் மண்டி மூடிக்கிடக்கிறது. இதனால் தனக்கு தேவையான தண்ணீரை எடுக்க அந்த பகுதியில் உள்ள ஒரு நபரின் வீட்டிற்கு நடந்து சென்று எடுத்து வந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக அது அவருக்கு முடியாமல் இருந்த நிலையில், தனது வீட்டின் முன்பாக செல்லும் சாலையின் உள்ளே பெரிய ராட்சத குழாய்கள் மூலம் கூடங்குளம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து தண்ணீர் சாலையில் ஊற்றுபோல் வெளியேறி வருகிறது. வெகு நாட்களாக இந்த தண்ணீர் இவ்வாறு வருவதால் அந்த பகுதி சிறிய குழி போல் தோன்றி உள்ளது. வீட்டின் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வந்த பாஞ்சாலி பாட்டி தனது வீட்டில் இருக்கும் சிறு குடத்தில் சின்ன வகை கோப்பையை பயன்படுத்தி தண்ணீரை எடுத்து சேகரித்து குடிக்க மற்றும் சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கு கடந்த 6 மாதங்களாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த தண்ணீரால் இதுவரை தனக்கு எந்த பாதிப்பும் வரவில்லை எனவும் சேகரித்து எடுத்து செல்லும் தண்ணீரை நன்றாக சூடாக்கி பருகி வருவதாகவும் தெரிவிக்கிறார். இந்த தள்ளாடும் வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் தனது தேவைகளை தனியாகவே பூர்த்தி செய்து வரும் இந்த மூதாட்டிக்கு இருந்துவந்த தண்ணீர் பற்றாக்குறையை இந்த சாலை தண்ணீர் தான் தீர்த்து வைத்து வருவதாக புன்னகை பூக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu