வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டு: கேள்விப்பட்டது உண்டா?
சேரன்மகாதேவியில் நடைபெற்ற அட்டையா, பட்டையா போட்டி.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளியாந்தட்டு என்ற விளையாட்டு, கடந்த 1982 ஆம் ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. தேசிய அளவில் உள்ள பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்த இந்த விளையாட்டு, தற்போது அட்டையை பட்டையா என்னும் விளையாட்டாக மாறி உள்ளது.
ஒரு அணியில் 9 பேர் விளையாட, மூன்று பேர் காத்திருக்கும் பலருக்கும் தெரியாத இந்த விளையாட்டு தற்போது பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற மாநில அளவிலான அட்டையா பட்டையா போட்டியில், முதல் பரிசை சென்னை அணியும், இரண்டாவது பரிசை ஈரோடு அணியும், மூன்றாம் பரிசை கன்னியாகுமரி மாவட்ட அணியும் பெற்றது.
இதனிடையே மூன்றாவது இடத்தை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல் பாராட்டு தெரிவித்தார். இதனிடையே பொதுமக்களில் பலருக்கும் தெரியாமல் இருந்தாலும் விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமான, அதே நேரம் சுறுசுறுப்பான விளையாட்டு என கூறப்படும் 'அட்டையா பட்டையா' விளையாட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக மாறி உள்ளது.
இதில் பயிற்சி பெற்று முன்னணி வீரர்களாக வருபவர்களுக்கு தபால் துறை மற்றும் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணிகள் அதிக அளவில் உள்ளன. எனவே உடல்நலத்தை பேணுவதோடு, அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாவதன் மூலம் இந்த விளையாட்டும் மேம்படும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu