கனமழை எதிரொலி: நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தீவிரமடைந்துள்ளது இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கோழிப்போர்விளையில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்கள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் இரணியல் ரயில் நிலையம் அருகில் நுள்ளிவிளை பகுதியில் இரட்டை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்டவாளங்களில் ஆறு போல் மழை நீர் பாய்ந்தோடுகிறது. தண்ணீர் புகுந்ததால் மங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், உள்ளிட்ட 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று காலை நாகர்கோவிலில் நிறுத்தபட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் கால்வாய்கள் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்ததோடு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu