குமரியில் வளச்சி திட்ட பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு: ஒப்பந்ததாரர்கள் முற்றுகை
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளர் பேரின்பம் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் ஓடை, மீன்சந்தை கட்டுமான பணிகள், சாலை பராமரிப்பு, குடிநீர் கிணறு தூர் வாருதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டது.
இந்நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு திரும்ப திரும்ப 3-முறை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்ட நிலையில் டெண்டரில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு தெரியாமல் 3-வது டெண்டரையும் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே டெண்டரில் கலந்து கொள்ளாத தனி நபர் ஒருவருக்கு மொத்த பணிகளும் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தகவல் அறிந்த டெண்டரில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்கள் இன்று குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த நகராட்சி பொறியாளர் பேரின்பம் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் பேசிய பொறியாளர் பேரின்பம் அமைச்சரின் வற்புறுத்தலின் பேரில் தான் சுரேஷ்ராஜன் என்ற நபருக்கு பணிகள் வழங்கியதாகவும், அந்த பணிகளை ரத்து செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டரை ரத்து செய்து மீண்டும் மறு டெண்டர் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் கலைந்து சென்றனர்.அமைச்சரின் வற்புறுத்தலின் பேரில் நகராட்சி பொறியாளர் முறையாக டெண்டர் விடாமல் தனி நபர் ஒருவருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை தனி நபர் ஒருவருக்கு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu