தடையால் வெறிச்சோடியது கன்னியாகுமரி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பைல் படம்
உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சூரிய உதய, சூரிய அஸ்தம காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.
மேலும் சொகுசு படகு மூலமாக கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையையும் ரசிப்பார்கள்.விடுமுறை நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காலங்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
மேலும் புத்தாண்டு தினத்தில் கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைகள் மற்றும் நட்சத்திர விடுதிகள் குடும்பத்தினர் நண்பர்களுடன் வரும் சுற்றுலா பயணிகளால் களைகட்டும்.இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் குமரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் பார்வையிடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி ஆள் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் சுற்றுலா படகு துறையில் படகுகள் ஒதுக்கப்பட்டு நுழைவு வாயிலும் மூடப்பட்டது, இதே போன்று மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலா தலங்களான சொத்தவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu