குமரியில் மினி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, நிறுத்தப்பட்டுள்ள மினி லாரிகள்
கன்னியாகுமரி மாவட்டம் கனிம வளங்கள் கடத்தும் லாரிகள் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கடத்தல் லாரிகள் மற்றும் அதிகபாரம் ஏற்றி அதி வேகமாக வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
ஆனால் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகள் தொடர்ந்து சென்று வரும் நிலையில், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் குறைவான பாரங்களை ஏற்றி வரும் மினி லாரிகளை நிறுத்தி அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மினி லாரிகள் ஓடும் நிலையில் அபராதம் விதிக்கும் போலீசாரின் செயல் தொடர்வதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இன்று சுசீந்திரம் அருகே காலி மனையில் வாகனங்களை நிறுத்திய மினி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மினி லாரி உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார். அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மினிலாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu