தேர்வு முடிந்த பின்னர் தீர்மானம் கொண்டு வருவது ஏமாற்றும் செயல் - தளவாய்சுந்தரம்
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேட்டி ( பைல் படம்)
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக மாணவர்களுக்கு துரோகம் செய்வதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் நீட் தேர்வு ரத்து தேர்வில் இருந்து விலக்கு என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது, கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஜனாதிபதிக்கு பல மனுக்கள் எழுதி அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியானது.
இநிலையில் கடந்த ஐந்து வருடங்களாக நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது, நீட் தேர்வை வைத்து அரசியல் பேசிய திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்ற பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் தங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என கூறியது.
தற்போது குறுகிய காலத்தில் நீட் தேர்வு ரத்து என்பது நடக்காத காரியம் என முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி வருகின்றனர், இவர்கள் வரும் ஐந்து ஆண்டு காலமும் இதையேதான் பேச போகிறார்கள்
அவர்களை பொருத்தவரை நீட் தேர்வு குறித்த அவர்களின் பேச்சு வரும் ஆனால் வராது என்ற வடிவேல் பாணியில் மட்டுமே இருக்கும் என்றும் மாணவர்கள் விஷயத்தில் துரோகம் செய்த திமுக எத்தனை முறை ஆட்சி கட்டிலில் இருந்து கொண்டு நீட் வராது என கூறினாலும், அதனை ரத்து செய்வதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.
நீட் தேர்வு ரத்து ஆனால் அது தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என கூறிய அவர் நீட் தேர்வு நடைபெறும் வரை அமைதியாக இருந்து விட்டு நாளை சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரப்படுவதாக கூறி மீண்டும் திமுக மக்களை ஏமாற்றுவதாகவும் அதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu