கன்னியாகுமரிக்கு சிறப்பு விடுமுறை! ஏன் தெரியுமா?
கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினத்தையொட்டி நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை.
1954ம் ஆண்டுக்கு முன்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது கன்னியாகுமரி. அதாவது இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தற்போது தென்காசி மாவட்டமாக மாறியிருக்கும் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1954ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தடையை மீறிய தியாகி மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். தன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள், போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பல நல்ல உயிர்களை இழந்தது தமிழ்நாடு.
கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. திருவிதாங்கூர் பகுதியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.1956ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன.
செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி 'கன்னியாகுமரி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் 'குமரி தந்தை' என அழைக்கின்றனர். இவரின் நினைவாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu