குமரி பகவதி அம்மன் கோவிலில் விதிகளை மீறி வசூல் வேட்டை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமரி பகவதி அம்மன் கோவிலில் விதிகளை மீறி வசூல் வேட்டை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை மீறி பணம் வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அய்யப்பா சேவா சமாஜம் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை மீறி வசூல் வேட்டை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை.

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் சபரிமலைக்கு சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்களின் வருகையால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி களைகட்டி உள்ளது.

அதன்படி வருகை தரும் அய்யப்ப பக்தர்கள் அங்கு உள்ள கடற்கரைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதோடு கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவற்றை சொகுசு படகில் சென்று பார்த்து செல்வர். மேலும் அங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மற்றும் பழமை வாய்ந்த கோவிலான பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தும் செல்கின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களிடம் அங்குள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலாளிகள் கோவில் ஆகம விதிகளை மீறி பணம் வசூலித்துக் கொண்டு கோவிலுக்குள் அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் நடக்காத பூஜையான கோடி அரச்னை பூஜைக்காக பணம் வசூலித்து வருவதாகவும், கோவிலில் 2 மடங்கு அதிகம் வைத்து பூஜை பொருட்களை விற்பனை செய்வதாகவும் இதனால் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு தயங்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் இந்து அமைப்பினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த அய்யப்பா சேவா சமாஜம் அமைப்பை சேர்ந்தவர்கள் கோவிலில் ஆகம விதிமுறைகளை மீறி வசூல் வேட்டையில் ஈடுபடும் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களால் நியமிக்கப்பட்டு உள்ள காவலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் கோவிலில் இதுவரையில் நடக்காத இனி மேலும் நடக்காத பூஜையான கோடி அர்ச்சனை பூஜையை கூறி வசூல் வேட்டை நடைபெறுகிறது. அதன் படி வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது என்பது தெரியவில்லை. இந்த அநீதி தொடர்ந்தால் அய்யப்பா சேவா சமாஜத்துடன் அனைத்து இந்து இயக்கங்களும் இணைந்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்