மிரட்டும் ஒற்றை காட்டு யானை - அஞ்சும் விவசாயிகள்

மிரட்டும் ஒற்றை காட்டு யானை - அஞ்சும் விவசாயிகள்
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிரட்டும் ஒற்றை காட்டு யானையை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான கீரிப்பாறை காளிகேசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து யானை கரடி உட்பட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இது குறித்து வனத்துறைக்கு கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் வனத்துறையினரும் வன விலங்குகளை காட்டுக்குள் விரட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனத்தில் இருந்து தெள்ளாந்தி அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த ஏராளமான தென்னை மரங்களை முறித்து சேதம் அடைய செய்தது.

இதனை கண்ட கிராம மக்கள் ஒற்றை யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அப்பகுதியை விட்டு செல்லாமல் கிராம மக்களை துரத்த ஆரம்பித்தது. இதனால் ஒற்றை யானையிடம் இருந்து உயிர் தப்பித்து கிராம மக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

நீண்ட நேரம் நின்ற யானை பின்னர் அப்பகுதியை விட்டு சென்றது. ஆனாலும் கடந்த சில நாட்களாக அந்த ஒற்றை காட்டு யானை அங்கேயே சுற்றி திரிவதால் காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் கிராமத்திற்குள் வரும் வாய்ப்பு இருப்பதால் கிராம மக்களும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே ஒற்றை யானையை வெறுமனே விரட்டாமல் அடந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் இதே பகுதியில் புகுந்த யானை கூட்டம் ஏராளமான வாழை மற்றும் தென்னை மரங்களை அழித்து சென்றது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!