குமரி மாவட்டத்தில் கனமழை: அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர, மலையோர பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இடைவிடாது பெய்ததன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, சிற்றாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 48 கனஅடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு, நீர்வரத்து 4000 கன அடியாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சிற்றாறு அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றபட்டு வருகிறது, மேலும் குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பரளியாறு, கோதையாறு, மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu